டீப் பேக் வீடியோ விவகாரம்; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு

தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பில் நீதிமன்றம் குறுக்கிடுவது சரியாக இருக்காது என டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2024-05-02 09:21 GMT

புதுடெல்லி,

மக்களவை தேர்தல் நடைபெறும் சூழலில், சமூக வலைதளங்களில் பரவும் டீப் பேக் வீடியோக்கள் தொடர்பாக 'வழக்கறிஞர்களின் குரல்' என்ற அமைப்பு சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மக்களவை தேர்தலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நடிகர்கள் அமீர்கான், ரன்பீர் கபூர் உள்ளிட்டோரின் டீப் பேக் வீடியோக்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், இதனை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு டெல்லி ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் மெஹ்தா ஆஜராகி, அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியாகும் தேர்தல் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிப்பதைப் போல், சமூக வலைதளங்களுக்கும் இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், இந்த யோசனை பொருத்தமற்றது என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் ஏற்பாடு சரியாகவே உள்ளது என்றும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரின் டீப் பேக் வீடியோக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பில் நீதிமன்றம் குறுக்கிடுவது சரியாக இருக்காது. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்திடமே விட்டுவிடுகிறோம். தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் சாசன அமைப்பு. அதன் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

டீப் பேக் வீடியோக்களை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும். சமூக வலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் வரும் திங்கள்கிழமைக்குள் முடிவெடுக்க வேண்டும்" என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்