வேட்பாளர் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு: சசி தரூர் எம்.பி.க்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

பா.ஜனதா வேட்பாளர் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு சுமத்தியதாக, சசி தரூர் எம்.பி.க்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-04-15 20:35 GMT

கோப்புப்படம்

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் பன்னியன் ரவீந்திரன் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அனைவரும் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அண்மையில் சசிதரூர் எம்.பி. அளித்த பேட்டியில், திருவனந்தபுரம் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், மதத் தலைவர்களுக்கும் பணம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து பா.ஜனதா சட்டப்பிரிவு ஒருங்கிணைப்பாளர், திருவனந்தபுரம் மாவட்ட தலைவர் ஆகியோர் மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தனர். புகார் குறித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் குறித்து சசிதரூர் கூறிய கருத்துகள் தேவையற்றவை என்றும், அதில் அடிப்படை ஆதாரங்கள் இல்லை எனவும் உறுதி செய்தது.

மேலும் என்னுடைய கருத்து எதிரணி வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் அல்லது பா.ஜனதா நோக்கியதாக இல்லை என்ற சசிதரூரின் கூற்றையும் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. சசிதரூரின் கருத்து தேர்தல் நடத்தை விதி மீறலாகும். எனவே இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதை சசிதரூர் நிறுத்திக் கொள்வதுடன், தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்