ஆபாச வீடியோ வழக்கு; ஹசன் தொகுதி எம்.பி. வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

கர்நாடகாவில் ஆபாச வீடியோ வழக்கில் தொடர்புடைய ஹசன் தொகுதி எம்.பி. வெளிநாட்டுக்கு தப்பியோடி உள்ளார்.

Update: 2024-04-28 08:00 GMT

பெங்களூரு,

கர்நாடகாவில் ஹசன் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பிரஜ்வால் ரேவண்ணா. மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்தவர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான இவர், நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஹசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமியின் சகோதரரின் மகன் பிரஜ்வால் ரேவண்ணா ஆவார்.

இந்நிலையில், இவருக்கு எதிராக வீடியோவுடன் கூடிய பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹசன் நகர் முழுவதும் பரவி வரும் அந்த வீடியோவில், பல பெண்களை கட்டாயப்படுத்தி அல்லது அவர்களின் ஒப்புதல் இல்லாமல் சில காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

இதுபற்றி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கர்நாடக மாநில மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தது. இந்நிலையில், சித்தராமையா தன்னுடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில், பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஹசன் மாவட்டத்தில் ஆபாச வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. அதில், பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர் என தெரிகிறது. இந்த சூழலில், இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வலியுறுத்தி, கர்நாடக மாநில மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை அரசுக்கு எழுதியுள்ளது. அவர்களுடைய வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த முடிவானது எடுக்கப்பட்டு உள்ளது என்று பதிவிட்டு உள்ளார்.

இந்நிலையில், ரேவண்ணா நேற்று காலை ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்று விட்டார் என தகவல் தெரிவிக்கின்றது. பா.ஜ.க.வுடன், மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணியில் உள்ளது. இந்த சூழலில், கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் இந்த விவகாரத்தில் ஆளும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஹசன் பகுதியிலுள்ள ஏதோவொரு தலைவர் மீது கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அல்ல இவை. இவற்றுக்கு கர்நாடக பா.ஜ.க. தலைவர் பி.ஒய். விஜயேந்திரா மற்றும் பலர் பதிலளிக்க வேண்டும்.

அவர்களுடைய நன்மதிப்பை கெடுக்க மகளிர் ஆணையம் முயற்சிக்கிறது என அவர்கள் கூறி வருகின்றனர் என்ற செய்திகளை படித்தேன். அந்த ஆணையம், முதல்-மந்திரி மற்றும் உள்துறை மந்திரிக்கு எதிராக கடிதம் எழுதியுள்ளது என கூறியுள்ளார்.

இந்த வழக்குடன் டி.கே. சிவக்குமாருக்கு மறைமுக தொடர்பு உள்ளது என முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமி குற்றச்சாட்டு கூறிய நிலையில், அதற்கு பதிலளித்த டி.கே. சிவக்குமார், என்னுடைய பெயரை அவர் வெளியே கூறட்டும். அவரை நான் வெளிப்படுத்துவேன். இப்படியெல்லாம் பேசி, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை அவர் நியாயப்படுத்துகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்