கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் தப்பிக்கும் வழிமுறைகள்

குத்துச்சண்டை வீரர் தற்காப்பு நிலையில் நிற்பது போல, கைகளை உயர்த்தி மார்புக்கு அருகில் வைத்துக்கொள்வதால், நுரையீரலுக்கு போதுமான பாதுகாப்பு கிடைக்கும்.;

Update:2025-10-05 13:18 IST

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் உடலில் அதிக அழுத்தம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் உருவாகி மரணத்துக்கு கூட வழிவகுக்கும். கூட்டநெரிசலின் போது ஏற்படும் குழப்பம் வாழ்க்கைக்கும், மரணத்துக்கும் இடையே ஒரு போராட்டமாக இருக்கும். இதில் இருந்து தப்பித்து பாதுகாப்பாக இருக்க சில வழிமுறைகளை இங்கே காணலாம்...

கூட்ட நெரிசல் ஏற்பட்டால் பக்கவாட்டு சந்து, கதவு அல்லது இடைவெளி போன்ற தப்பிக்கும் வழிகள் ஏதேனும் சுற்றுப்புறங்களில் உள்ளதா என தேட வேண்டும்.

கூட்ட நெரிசலின்போது எப்படியாவது எழுந்து நிற்க முயற்சிக்க வேண்டும். கூட்டத்தில் விழுந்தால் எழுந்திருப்பது மிகவும் கடினம். விழுந்தால் மற்றவர்களால் மிதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. கூட்டத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள அருகிலுள்ள சுவர், தூண் போன்றவற்றைத் தேட வேண்டும். கிடைக்கக்கூடிய எந்த ஆதரவையும் பயன்படுத்தி நிமிர்ந்து நிற்க முயல வேண்டும்.

இந்த அவசர காலங்களில் அமைதியாக பதற்றப்படாமல் இருந்து தெளிவாக சிந்திப்பது அவசியம். பயப்படுதல் தப்பிப்பதற்கான உங்கள் யோசனையை மழுங்கடிக்கும். இதனால் முடிவுகள் எடுப்பதை கடினமாக்கும். சில ஆழமான சுவாசங்களை எடுத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிலைமையை அறிந்து உடனடியாகப் பாதுகாப்பிற்கான வழியைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு கூட்டத்துக்கு சென்றால் வெளியேறும் இடங்கள், முதலுதவி மையங்கள், பாதுகாப்பு மையங்கள், நுழைவு வாயில்கள் ஆகியவற்றை முன்னரே தெரிந்து வைத்திருப்பது முக்கியம். இதனால் வரும் ஆபத்தில் இருந்து தப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

கூட்டம் நடைபெறும் இடத்தின் மையப்பகுதியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். அந்த இடம் பெரும்பாலும் மக்கள் கூட்டத்தின் அடர்த்தி அதிகமாக நிரம்பி இருக்கும். ஓரங்களை நோக்கி நகர வேண்டும். இங்கு சுவாசிக்கவும், நகரவும் வாய்ப்பு இருக்கும்.

கூட்டத்தை எதிராக தள்ளி போராட முயற்சிப்பதை கைவிடவும். இது உங்களை சோர்வடைய செய்வதுடன் காயம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். அதற்கு பதிலாக பாதுகாப்பான வழியை கண்டுபிடிக்க கூட்டத்துடன் சேர்ந்து நகர்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

காவல்துறை அதிகாரிகள் இருந்தால், அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். அவர்கள் பாதுகாப்பாக தப்பிக்கும் பாதைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்கவோ அல்லது அப்பகுதியை விட்டு வெளியேற உதவி வழங்கவோ முடியும்.

அவசரகால நடைமுறைகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். உங்களை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள்.

`சி’ வடிவம்கூட்ட நெரிசலின் போது கீழே விழுந்தால், உடனடியாக ஒரு பக்கமாகப் படுத்துக்கொண்டு தலையை கைகளால் மூட வேண்டும். இது `சி’ வடிவத்தில் படுத்துக்கொள்வது என்று அழைக்கப்படுகிறது. இது தலை மற்றும் உடலை காயத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. அதே நேரத்தில் நுரையீரல் மற்றும் இதயத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது.

நெரிசலின்போது பெரும்பாலன இறப்புகள் மூச்சுத்திணறல் காரணமாக நிகழ்கிறது. இது மார்பு மற்றும் உடலின் மேல் கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும்போது ஏற்படுகிறது. இந்த அழுத்தம் சுவாசம் மற்றும் ரத்த ஓட்டத்தை தடுக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கூட்ட நெரிசலின்போது ‘குத்துச்சண்டை வீரர் நிலை’ தற்காத்துக் கொள்ள உதவுகிறது. ஒரு குத்துச்சண்டை வீரர் தற்காப்பு நிலையில் நிற்பது போல, கைகளை உயர்த்தி மார்புக்கு அருகில் வைக்க வேண்டும். இந்த நிலைப்பாடு நுரையீரலுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குகிறது. உடல் அழுத்தத்தைக் குறைத்து, மூச்சுத் திணறல் அல்லது காயம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. இது போன்ற அவசர நிலைகளில் `குத்துச்சண்டை வீரர் நிலை’ உதவியதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்