இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்!
மனவலிமை குறைவாக இருப்பதே இந்த விபரீத முடிவுகளுக்கு முதன்மையான காரணம்.;
தற்கொலைகள் அதிகரிப்பு என்பது உலக சமுதாயத்தை கவலை கொள்ள செய்திருக்கிறது. உலகில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் உயிரை மாய்க்கிறார்கள். கணக்கீட்டு அடிப்படையில் 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்வதாகவும், 20 பேர் வரை இந்த குறுகிய நேரத்தில் தற்கொலை முயற்சி செய்வதாகவும் கூறுகிறார்கள். கொரியா, இந்தியா, சீனாவில் அதிக தற்கொலைகள் நடக்கின்றன. அதில் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களே பெரும்பாலானவர்கள்.
தற்கொலைகளை கட்டுப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 2003-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 10-ந்தேதி தற்கொலை தடுப்பு தினமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு இன்று (செப்.10-ந்தேதி) தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்குரிய கருப்பொருளாக “தற்கொலை பற்றி பேசும் விதத்தை மாற்றி, மக்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்” என்பதை முழக்கமாக அறிவித்து உள்ளார்கள்.
தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி (இடம்: பாளையங்கோட்டை)
தற்கொலை எண்ணமும் ஒரு கொடிய நோய்தான். மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை பரப்புவதில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டால்தான் இந்த கொடிய நோயை சமூகத்திலிருந்து ஒழிக்க முடியும்.
மனவலிமை குறைவாக இருப்பதே இந்த விபரீத முடிவுகளுக்கு முதன்மை காரணம். காதல், நண்பர்களுடன் தகராறு, குடும்ப பிரச்சினை, தேர்வில் தோல்வி, மனச்சோர்வு, தனிமையை விரும்புவது, கவலைகள், பொருளாதார சிக்கல்கள், உறவு முறிவு, நாள்பட்ட வலி, நோய், சமுதாய பாகுபாடு, இழப்பு, பயம், பதற்றம் போன்றவை மற்ற காரணங்கள்.
அம்மா திட்டியது, டி.வி. ரிமோட் தராதது, செல்போன் கொடுக்காதது என அற்ப விஷயங்களுக்கு கூட தற்போது தற்கொலைகள் நடக்கின்றன. போதைப்பழக்கம், வலைதளங்களுக்கு அடிமையாதல், கடன் செயலிகளை பயன்படுத்துவது, ஆன்லைன் விளையாட்டுகள் போன்ற காரணிகள், மொத்த சம்பவங்களில் 30 சதவீதம் அளவுக்கு உள்ளதாம்.
வடமாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவதுபோல் கல்வி அதிகம் பெற்ற தென்மாநிலங்களில் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தியில் பலரும் தற்கொலை செய்கின்றனர். ஆண்டுதோறும் மாணவர்களின் தற்கொலை விகிதம் உயர்ந்துகொண்டே செல்கிறது. எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதை இளம்சமுதாயம் உணர வேண்டும். இதற்கு வல்லுனர்கள் தரும் அறிவுரைகளை காண்போம்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மனநல மருத்துவத்துறை தலைவர் கீதாஞ்சலி கூறியதாவது:-
பிரச்சினையை அணுக தெரிந்துகொண்டால் போதும். தற்கொலை எண்ணத்தை கைவிட்டு விடலாம்.ஒரு முறை தற்கொலைக்கு முயன்றவர்கள், மீண்டும் அவ்வாறு முயற்சி செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அது போன்ற நிலையில் இருப்பவர்களின் வலியை உணர்ந்து உதவி செய்ய வேண்டும். யாரையும் உதாசீனம் செய்யக்கூடாது. எலிபேஸ்ட் உள்ளிட்ட விஷங்களை அரசு தடைசெய்துள்ளது. டாக்டரின் பரிந்துரை இல்லாமல் தூக்க மாத்திரைகள் கொடுக்கக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்கொலைகளை தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவக்கல்லூரி மனநலத்துறை பேராசிரியர் சுகதேவ் கூறுகையில், ‘மனநோய் பற்றி தவறான கண்ணோட்டம் இருப்பதால், அதற்கு சரிவர சிகிச்சை எடுக்க மறுக்கின்றனர். காலப் போக்கில், அது தற்கொலை எண்ணத்தை தூண்ட காரணமாகி விடுகிறது. இந்த எண்ணம் எல்லா வயதினருக்கும் வரும். மனித வாழ்க்கை என்பது, கருவறை முதல் கல்லறை வரை போராட்டங்கள் நிறைந்தது. கஷ்டங்கள் இல்லாத மனித வாழ்க்கையே கிடையாது. தற்கொலை எண்ணம் இருப்பவர்கள் சமூதாயத்தில் இருந்து விலகி போகக்கூடாது. அருகில் இருப்பவர்களும் அவர்களை ஒதுக்கக்கூடாது. நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மனம்விட்டு பேச வேண்டும். மனநல ஆலோசகர், மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது’ என்றார்.
இதில் உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி உதவி எண் 14416-ல் தொடர்புகொள்ளலாம். 104 என்ற எண்ணிலும் மனநல ஆலோசனைகள் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 1098 என்ற உதவி மையத்திலும், 9152987821 என்ற சூசைட் ஹெல்ப்லைன் எண்ணிலும் பேசலாம். இதுபோல், https://icallhelpline.org/ என்ற இணையதளத்திலும் தொடர்பு கொண்டு உளவியல் ஆலோசனை பெறலாம்.