கல்விக்கடனுக்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன...? தெரிந்து கொள்ளுங்கள்

கல்விக்கடன் நிதித் திறன் இல்லாத மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போன்றது.;

Update:2025-09-24 17:41 IST

எல்லா மாணவர்களிடமும் இருக்கும் ஒரே லட்சியம், நன்றாக படித்து எதிர்காலத்தில் கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். பள்ளிப் படிப்புக்கு பின்னர், பொருளாதார ரீதியில் நல்ல நிலைமையில் உள்ள மாணவர்கள் பணத்தை செலவழித்து நினைத்த படிப்பை படிப்பார்கள். ஆனால், கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த போதிய பணம் இல்லாமல் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஒரே வழி கல்விக் கடன்தான்.

கல்விக்கடன் நிதித் திறன் இல்லாத மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போன்றது. ஆனால், பெரும்பாலும் கல்விக் கடனுக்காக எந்த வங்கிக்குச் சென்றாலும், இந்த ஆவணம் இல்லை.... அந்த ஆவணம் இல்லை என சிறு ஆவணங்களுக்காக திருப்பி அனுப்புவார்கள்.

அத்தகைய சந்தர்ப்பங்களில் நாமும் நமது பெற்றோரும் சற்று ஏமாற்றம் அடைவதோடு, சங்கடமும் ஏற்படும். அந்த ஆவணங்கள் நம்மிடம் சரியாக இருந்தால், நமக்கான அலைச்சலும் குறையும், அனைத்து வேலைகளும் வேகமாகவும் முடியும். எனவே, தான் கல்விக் கடன் வாங்கும்போது உங்களுக்குத் தேவையான சில ஆவணங்களின் பட்டியலை உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.

* தகுதிகள்

கல்விக் கடனைப் பெற, சில நிபந்தனைகளை பூர்த்தி செய்வது அவசியம். எந்தவொரு இந்திய வங்கியில் இருந்தும் கல்விக் கடனைப் பெற முதலில் இந்தியக் குடிமகனாக இருப்பது முக்கியம். உங்கள் வயது 16 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நுழைவுத் தேர்வின் மூலம் நீங்கள் தொடர விரும்பும் படிப்பில் சேர்க்கை பெறுவதும் கட்டாயம்.

* கடன் தொகை

இந்தியாவில் உயர்கல்விக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். உயர் கல்விக்காக வெளிநாடு செல்வதற்கு, ரூ.20 லட்சம் வரை கல்வி கடன் பெற வாய்ப்புண்டு.

* ஆவணங்கள்

நீங்கள் சேரப்போகும் படிப்பு மற்றும் கல்லூரியின் அட்மிட் கார்டு மற்றும் கல்லூரி பற்றிய முழுமையான தகவல்கள் தேவைப்படும். பாடநெறி கட்டணம் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்ட ஆவணம் அவசியம்.

மதிப்பெண் தாளின் நகல் மற்றும் அது தொடர்பான சில முக்கிய ஆவணங்களையும் உடன் வைத்திருக்க வேண்டும். வயது மற்றும் அடையாளச் சான்று, அந்த வங்கியில் உங்களிடம் கணக்கு இல்லையென்றால் அதனுடன் முகவரிச் சான்றினையும் வழங்க வேண்டும்.

பெற்றோரின் வருமானச் சான்று அவசியம். தொழில் செய்பவர்களாக இருந்தால் கடைசி ஆறு மாத வங்கி அறிக்கை அவசியம். இவற்றுடன், நல்ல தகவல் தொடர்பும், நேரம் தவறாத பண்பும் இருந்தால், கல்விக்கடனை சுலபமாக பெறலாம்.

Tags:    

மேலும் செய்திகள்