2-வது டெஸ்ட்: மோசமான பேட்டிங்.. பாலோ ஆன் ஆன இந்தியா
தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.;
கவுகாத்தி,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முத்துசாமி 109 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மையால் 2-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (7 ரன்), லோகேஷ் ராகுல் (2 ரன்) களத்தில்இருந்தனர். இந்த சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் - ராகுல் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ராகுல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சாய் சுதர்சன் சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மளமளவென விக்கெட்டுகளை தாரை வார்த்தனர்.
துருவ் ஜூரெல் டக் அவுட் ஆகியும், பண்ட் 7 ரன்களிலும், ஜடேஜா 6 ரன்களிலும், நிதிஷ் ரெட்டி 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இந்த 4 பேரின் விக்கெட்டுகளையும் மார்கோ ஜான்சன் கைப்பற்றினார்.
122 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை வாஷிங்டன் சுந்தர் - குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்து காப்பாற்ற போராடினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்ட இந்த ஜோடி அணிக்கு நம்பிக்கை அளித்தது. கை தேர்ந்த பேட்ஸ்மேன் போல ஆடிய குல்தீப் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே உரிய பாணியில் ஆடி தென் ஆப்பிரிக்க பவுலர்களுக்கு தண்ணி காட்டினார். மறுமுனையில் வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக ஆடினார்.
72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுந்தர் 48 ரன்களில் கேட்ச் ஆனார். சிறிது நேரத்திலேயே குல்தீப் யாதவும் 19 ரன்களில் (134 பந்துகள்) நடையை கட்டினார்.
மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி முதல் இன்னிங்சில் 83.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 201 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இருப்பினும் இந்திய அணிக்கு பாலோ - ஆன் வழங்காத தென் ஆப்பிரிக்க அணி 288 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.