டெஸ்ட் கிரிக்கெட்: டி காக், டி வில்லியர்சின் வரலாற்று சாதனையை சமன் செய்த மார்கோ ஜான்சன்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் மார்கோ ஜான்சன் 93 ரன்கள் அடித்தார்.;
கவுகாத்தி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 151.1 ஓவர்களில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக செனுரன் முத்துசாமி 109 ரன்களும், மார்கோ ஜான்சன் 93 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளது.
இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் முதல் இன்னிங்சில் 9-வது வரிசையில் களமிறங்கிய மார்கோ ஜான்சன் அதிரடியாக விளையாடி 91 பந்துகளில் 93 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 7 சிக்சர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் என்ற ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோரின் வாழ்நாள் சாதனையை மார்கோ ஜான்சன் சமன் செய்துள்ளார். மூவரும் தலா 7 சிக்சர்களுடன் இந்த சாதனையில் முதலிடத்தில் உள்ளனர்.