ஒரே ஓவரில் 34 ரன்கள்...மஹாராஜ் பந்தை பறக்கவிட்ட பேர்ஸ்டோ - ‘எஸ்ஏ20’ தொடரில் புதிய சாதனை
தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.;
கேப்டவுன்,
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ. டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ், எம்.ஐ கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் என ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
அதில் நேற்று செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற 14வது போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து 20 ஓவரில் 176/7 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணிக்கு குவிண்டன் டீ காக் அதிரடியாக ரன்களை குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ பிரிட்டோரியா பவுலர்களை பந்தாடினார். அப்போது கேசவ் மகாராஜ் 12வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஜானி பேர்ஸ்டோ 34 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் பேர்ஸ்டோ 2022 முதல் நடைபெற்று வரும் எஸ்ஏ20 தொடரில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மறுபுறம் ஒரே ஓவரில் அதிக ரன்கள் வழங்கிய பவுலர் என்ற மோசமான சாதனையை மஹாராஜ் படைத்துள்ளார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய பேர்ஸ்டோ 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 85* (45) ரன்களை குவித்தார். அவருடன் சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாத டீ காக் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 79* (41) ரன்கள் எடுத்தார். அதனால் 14.2 ஓவரிலேயே 177/0 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.