வைரலான அங்கத் பும்ராவின் வீடியோ - பும்ராவின் மனைவி சஞ்சனா ஆதங்கம்
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.;
மும்பை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிக்கெல்டன் 58 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 54 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் மயங்க் யாதவ், ஆவேஷ்கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் கடின இலக்கை நோக்கி களம் புகுந்த லக்னோ அணியால் 20 ஓவர்களில் 161 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 35 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தை நேரில் காண பும்ராவின் மனைவி சஞ்சனா மற்றும் அவர்களது மகன் அங்கத் மைதானத்திற்கு வந்திருந்தனர். அப்போது பும்ரா ஒரு விக்கெட் வீழ்த்தியதும் கேமரா சஞ்சனா மற்றும் அங்கத்தின் பக்கம் திரும்பியது. அதில் இருவரும் பும்ரா விக்கெட் கைப்பற்றியதை கைதட்டி கொண்டாடினர்.
ஆனால் அங்கத் சிரிக்காமல் அமைதியாக இருந்தான். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை கண்ட பலரும் அங்கத் குறித்து பல விதமான கருத்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து பும்ராவின் மனைவி சஞ்சனா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என் மகன் அங்கத் பும்ரா ஒரு வைரல் செய்தியாக ஆக்கப்படுவதில் எங்களுக்கு துளியும் விருப்பமில்லை. சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் வெறும் 3 வினாடி வீடியோவை வைத்து அங்கத் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என தீர்மானிக்கின்றனர்.
மன அழுத்தம் போன்ற வார்த்தைகளை ஒன்றரை வயதான ஒரு குழந்தையின் குணாதிசயங்களுடன் ஒப்பிட்டு பேசுவதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. எங்களின் மகனை பற்றியும், வாழ்க்கையை பற்றியும் உங்களுக்கு ஒன்றும் தெரியாது! இன்றைய உலகில் நேர்மையும் கொஞ்சம் நீண்ட தூரம் செல்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.