மகளிர் பிரீமியர் லீக்: லாரா போராட்டம் வீண்...4 ரன்களில் குஜராத்திடம் தோற்ற டெல்லி

4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.;

Update:2026-01-11 23:16 IST

நவிமும்பை,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் - டெல்லி அணிகள் மோதின.

இந்த போட்டிக்கான டாஸை வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் குஜராத் அணி வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஷோபி டேவின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். அரைசதம் கடந்த அவர் 95 ரன்கள் எடுத்தார். அஸ்லேயிங் கார்டனர் 49 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் 209 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் நன்தனி ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 210 ரன்கள் இலக்குடன் விளையாடிய டெல்லி அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. ஷபாலி வர்மா(14) ரன்களில் அவுட்டாக , மறுபுறம் நிலைத்துநின்று ஆடிய லிசெல் லீ, குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த லாரா வோல்வார்ட்டும் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

86 ரன்கள் அடித்திருந்தபோது லிசெல் லீ தனது விக்கெட்டை பறிகொடுக்க, மறுபுறம் லாரா வோல்வார்ட் தனியாளாக வெற்றிக்காக போராடினார். இருப்பினும் 77 ரன்கள் எடுத்திருந்தபோது அவரும் ஆட்டம் இழந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சோபி டெவின் மற்றும் ராஜேஸ்வரி கயக்வாட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்