வங்காளதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகி நீக்கம்
வங்காளதேச அணி விலகினால் வீரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது என்றும் கூறினார்.;
டாக்கா ,
வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனால் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது. இதையடுத்து, வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்தது.
எந்தவித காரணமும் இல்லாமல் தங்கள் நாட்டு வீரரை ஐ.பி.எல். அணியில் இருந்து நீக்கியதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த வங்காளதேசம், டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியது. அத்துடன் தங்கள் நாட்டில் ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்புக்கு தடை விதித்துள்ளது. மேலும், தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுதியது.
இந்த விவகாரத்தில் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் உணர்வுபூர்வமாக செயல்படாமல் வங்காளதேச கிரிக்கெட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் தெரிவித்தார். எனவே அவரை ‘இந்தியாவின் முகவர்’ என்று வங்காளதேச கிரிக்கெட் வாரிய இயக்குனரும், நிதி கமிட்டி தலைவருமான நஸ்முல் இஸ்லாம் கடுமையாக விமர்சித்தார். அத்துடன் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த வீரர்களையும் சாடினார். மேலும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வங்காளதேச அணி விலகினால் வீரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது என்றும் கூறினார்.
நஸ்முல் இஸ்லாமின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் நல சங்கம் உள்ளூர் போட்டிகள் அனைத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் குதித்தது. இதனால் வங்காளதேசத்தில் நேற்று முன்தினம் எந்தவொரு லீக் கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. இதனையடுத்து பணிந்த வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நஸ்முல் இஸ்லாமை நிதி கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நீக்கியது. இதனையடுத்து வீரர்கள் தங்களது புறக்கணிப்பு முடிவை கைவிட்டு நேற்று உள்ளூர் லீக் போட்டிகளுக்கு திரும்பினர். இருப்பினும் நஸ்முல் இஸ்லாம் விரைவில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வீரர்கள் நலச் சங்கம் வற்புறுத்தியது.