2 வருடங்களுக்குப் பின்...இந்திய டி20 அணியில் என்ட்ரி கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்க உள்ளது.;
சென்னை,
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக விலகிய திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக ஷ்ரேயாஸ் மற்றும் ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்க உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணியே, இந்த டி20 தொடரிலும் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், விஜய் ஹசாரே தொடரின்போது திலக் வர்மா காயம் அடைந்தார். இதனால் திலக் வர்மா திட்டமிட்டபடி நியூசிலாந்து டி20 தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்தார். இதன் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய அவர், ஓய்வில் இருக்கிறார்.
இந்த நிலையில் நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல் 3 போட்டிகளில் இருந்து திலக் வர்மாவும் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திலக் வர்மாவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடைசியாக 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த டி20 போட்டியில் விளையாடிய ஸ்ரேயாஸ், சுமார் 2 வருடங்களுக்கு பின் இந்திய டி20 அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் திரும்பி இருக்கிறார்.
அதேபோல் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரவி பிஷ்னோய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரவி பிஷ்னாய் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 தொடரில் விளையாடி இருந்தார்.