அவுட் ஆனதால் விரக்தி.. கோபத்தில் பாக்.வீரர் செய்த செயல்.. ஐ.சி.சி. தண்டனை
பாகிஸ்தான் - இலங்கை 3-வது ஒருநாள் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது.;
துபாய்,
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது.
இதில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி நிர்ணயித்த 212 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் முன்னணி பேட்ஸ்மேனான பாபர் அசாம் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் கோபத்தில் ஸ்ட்ம்ப்பை தனது பேட்டால் அடித்தார். இது ஐ.சி.சி. விதிமுறையை மீறிய குற்றமாகும்.
இது குறித்து கள நடுவர்கள் ஐ.சி.சி. -யிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.சி.சி., பாபர் அசாமுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கி தண்டனை விதித்துள்ளது.