மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.;

Update:2025-12-05 08:37 IST

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 74 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 135 ரன்களுடனும், ஜோப்ரா ஆர்ச்சர் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இடக்கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் இந்த இன்னிங்சில் வீழ்த்தியுள்ள 6 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 418-ஆக (102 டெஸ்ட்) உயர்ந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் 414 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரை முந்தியுள்ள மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை படைத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்