ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: இந்திய அணி தொடர்ந்து 2-வது தோல்வி

இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் யுஏஇ உடன் மோதியது.;

Update:2025-11-08 10:10 IST

image courtesy:twitter/@HongKongSixes

ஹாங்காங்,

ஹாங்காங் சிக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டி அங்குள்ள மோங்காக் நகரில் நேற்று தொடங்கியது. 6 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் ஒரு அணியில் 6 வீரர்கள் அங்கம் வகிப்பார்கள். இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியும், 2-வது ஆட்டத்தில் குவைத்துக்கு எதிராக தோல்வியும் கண்டிருந்தது.

இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் யுஏஇ உடன் மோதியது. இதில் டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிமன்யு மிதுன் 50 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 42 ரன்களும் அடித்தன. யுஏஇ தரப்பில் நிலான்ஷ் கேஸ்வானி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 108 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய யுஏஇ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன காலித் ஷா மற்றும் சாகீர் கான் அதிரடியாக ஆடி வலு சேர்ததனர். காலித் ஷா 50 ரன்களில் (14 பந்துகள்) ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். சாகீர் கான் 31 ரன்களில் அவுட்டானார்.

இறுதி கட்டத்தில் முகமது அர்பான் 5 பந்துகளில் 20 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். 5.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த யுஏஇ அணி 111 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். 

Tags:    

மேலும் செய்திகள்