நெருங்கும் ஐ.பி.எல். ஏலம்: விஜய்யின் மகனை வைத்து அஸ்வின் சொன்ன வீரர் யார் தெரியுமா..?
ஐ.பி.எல். மினி ஏலம் நாளை நடைபெற உள்ளது.;
சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் நாளை (16-ந் தேதி) அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பித்தன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பி.சி.சி.ஐ. இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. அதன்படி 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 31 இடங்கள் உட்பட, மொத்தம் 77 வீரர்களை அணிகள் தேர்ந்தெடுக்க இந்த ஏலத்தில் போட்டியிட உள்ளார்கள். இதனிடையே கடைசி நேரத்தில் இந்திய வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் ஏலப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த ஏலம் குறித்தும், ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய வீரர்கள் குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஏலம் குறித்து அவ்வப்போது கருத்துகளை வெளியிட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறார்.
இந்நிலையில் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன? என்ற தலைப்புடன் வெறும் இரண்டு கண்கள் மட்டுமே உள்ள எமோஜிகளை சேர்த்து பதிவிட்டிருந்தார்.
ஐ.பி.எல். ஏலம் நெருங்குகின்ற வேளையில் அஸ்வின் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்? என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது.
அந்த வகையில் அஸ்வின் பதிவிட்டுள்ளது புத்திசாலித்தனமான வார்த்தை விளையாட்டு என்பது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே இதபோன்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது ‘ஜேசன் சஞ்சய்’ பெயரிலிருந்து ‘ஜேசன்’ மற்றும் ‘பல்பு ஹோல்டர்’என்ற வார்த்தையிலிருந்து ‘ஹோல்டர்’ இரண்டையும் இணைத்து ‘ஜேசன் ஹோல்டர்’ என்ற வென்ஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டரை குறிப்பால் உணர்த்தியுள்ளார்.
நாளை நடைபெற உள்ள மினி ஏலத்தில் இவர் கவனிக்கக்கூடிய வீரராக இருப்பார் என்பதை அஸ்வின் இந்த பதிவின் மூலம் உணர்த்தியுள்ளார். ஹோல்டர் ஏலப்பட்டியலில் அடிப்படை விலை ரூ. 2 கோடி பிரிவில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஏற்கனவே ‘சன்னி சந்து’ என்ற தமிழக வீரரின் பெயரை சன்னி லியோன் பெயரிலிருந்து "சன்னி" மற்றும் தெருவின் பெயரால் குறிக்கப்படும் "சந்து" இரண்டையும் இணைத்து ‘சன்னி சந்து’ என இதேபோன்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.