அவர்கள் இருவரும் கண்டிப்பாக டி20 உலகக்கோப்பையில்... - அபிஷேக் சர்மா நம்பிக்கை
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.;
image courtesy: BCCI
தர்மசாலா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி 17-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டனான சுப்மன் கில் இருவரும் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இதில் இந்திய கேப்டன் சூர்யகுமார் கடைசி 20 இன்னிங்சில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மறுபுறம் சுப்மன் கில்லும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இதன் காரணமாக இந்திய டி20 அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் இருவரும் டி20 உலகக்கோப்பையில் நிச்சயமாக இந்திய அணிக்கு நிறைய போட்டிகளை வென்று கொடுப்பார்கள் என அபிஷேக் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ஒரு விஷயத்தை நான் நேரடியாகச் சொல்கிறேன். நம்புங்கள், இந்த இரண்டு வீரர்களும் (சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில்) டி20 உலகக்கோப்பையில் மட்டுமல்ல, அதற்கு முன்பாக நடைபெறும் பிற தொடர்களிலும் இந்திய அணிக்காக போட்டிகளை வெற்றி பெற செய்வார்கள். நான் அவர்களுடன் நீண்ட காலம் விளையாடி உள்ளேன்.
குறிப்பாக சுப்மனுடன் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். அதனால் சுப்மன் கில் எங்கே அசத்துவார், எதிரணி யாராக இருந்தாலும் எம்மாதிரியான சூழ்நிலைகளில் அசத்துவார் என்பதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். ஆரம்பத்திலிருந்தே அவர்மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதை அனைவரும் மிக விரைவில் காண்பார்கள் என்று நம்புகிறேன். அனைவரும் அவர் மீது நம்பிக்கை வைப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.