அப்படிப்பட்ட பேட்ஸ்மேன்களில் சாம்சனும் ஒருவர் - கவாஸ்கர் புகழாரம்
ஆசிய கோப்பையில் ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.;
மும்பை,
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஓமன் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 56 ரன்கள் அடித்தார். ஓமன் தரப்பில் ஷா பைசல், ஜிதன் ராமநந்தி, ஆமிர் கலீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்றது. ஓமன் அணியில் அதிகபட்சமாக ஆமீர் கலீம் 64 ரன்களும், ஹம்மது மிர்சா 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஹர்திக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஆன சுப்மன் கில்லின் விக்கெட்டை விரைவிலேயே பறிகொடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் அமைந்தார். இருப்பினும் குறைவான ஸ்ட்ரைக்ரேட்டில் (124.4) விளையாடியதை சிலர் விமர்சித்தனர்.
இந்நிலையில் சாம்சன் சூப்பர் 4 சுற்றில் அசத்துவதற்காகவே களத்தில் அதிக நேரத்தை செலவிட்டு நிதானமாக விளையாடியதாக இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அத்துடன் தாங்கள் விரும்பும் பக்கத்தில் அடிக்கும் திறமை கொண்ட பேட்ஸ்மேன்களில் சாம்சனும் ஒருவர் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “அவர் (சாம்சன்) மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டியிருந்தது, அதைத்தான் அவர் செய்தார். ஏனென்றால் அடுத்த போட்டியில் (சூப்பர்4 சுற்று) அவர் 4வது அல்லது 5வது இடத்தில் பேட்டிங் செய்ய வரக்கூடும், மேலும் அவரது பேட்டிங் அங்கு தேவைப்படும். ஒரு பேட்ஸ்மேன் களத்தில் சில ஓவர்கள் நின்று சிக்சர்கள் பவுண்டரிகளுடன் 40 - 50 ரன்கள் குவிப்பது தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அவரது டைமிங் சிறப்பாக இருந்தது.
குறிப்பாக காத்திருந்து கடைசி நொடியில் நேராக அவர் அடித்த சிக்சர் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. அதிலிருந்து அவரது தரத்தை நாம் காணலாம். பந்தை விளையாட அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது. எங்கு அடிக்க வேண்டும் என்பதில் அவருக்கு பல தேர்வுகள் உள்ளன. சில பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே லெக் அல்லது ஆப் சைட் என தாங்கள் விரும்பும் பக்கத்தில் அடிக்கும் திறமை இருக்கும். சாம்சன் அவர்களில் ஒருவர்” என்று கூறினார்.