டி20 கிரிக்கெட் தொடர்: தொடர்ந்து 8-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா

2023 ஆசியன் போட்டிகள், 2024 டி20 உலக கோப்பை மற்றும் 2025-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை ஆகியவையும் இந்த வெற்றிகளில் அடங்கும்.;

Update:2025-12-20 00:27 IST

ஆமதாபாத்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 232 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடியது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 201 ரன்களே எடுத்தது.

இந்திய தரப்பில் வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளும், பும்ரா 2விக்கெட்டுகளும், பாண்ட்யா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இதனால், தென்ஆப்பிரிக்காவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா 2-1 என்ற புள்ளி கணக்கில் ஏற்கனவே முன்னிலை வகித்த நிலையில், இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் 3-1 என்ற புள்ளி கணக்கில் தொடரை கைப்பற்றியது.

போட்டி நாயகனாக ஹர்தீக் பாண்ட்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதனால், டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி தொடர்ந்து 8-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதனுடன், இந்த போட்டியில் பெற்ற வெற்றியால், தொடர்ந்து 14-வது முறையாக டி20 தொடரில் தோல்வியடையாத அணியாகவும் இந்தியா உள்ளது. இந்த வெற்றிகளில், 2023 ஆசியன் போட்டிகள், 2024 டி20 உலக கோப்பை மற்றும் 2025-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டிகளுக்கான வெற்றியும் அடங்கும்.

கடைசியாக 2023-ம் ஆண்டு ஆகஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டி20 தொடரை இழந்திருந்தது. அதற்கு பின்னர் தொடர்ந்து டி20 தொடரில் தோல்வியடையாத அணியாக இந்தியா தொடர்ந்து வெற்றியை பெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்