உடல்நிலையில் முன்னேற்றம்...சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர்

அவர் இப்போது அபாயக்கட்டத்தை தாண்டியதுடன், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.;

Update:2025-10-29 07:26 IST

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பிறகு பீல்டிங் செய்ய வரவில்லை. அவர் இடது கீழ் விலாஎலும்பு பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் சில ‘ஸ்கேன்’ பரிசோதனை மேற்கொண்ட போது, விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஸ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

உடனடியாக ரத்தக்கசிவை தடுப்பதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இப்போது அபாயக்கட்டத்தை தாண்டியதுடன், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ‘ஸ்ரேயாஸ் அய்யரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி சிட்னியில் சிறப்பு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசிப்பதுடன், தொடர்ந்து அவரது முன்னேற்றத்தை கண்காணிக்கிறது’ என இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்