முதல் டெஸ்ட்: ஷாய் ஹோப் அபார சதம்.. தோல்வியை தவிர்க்க போராடும் வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற நியூசிலாந்து 531 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.;
image courtesy:ICC
கிறைஸ்ட்சர்ச்,
நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 231 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்னும் எடுத்தன. 64 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் எடுத்திருந்தது.
3-வது நாளான நேற்று நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், டிவான் கான்வே தொடர்ந்து பேட் செய்தனர். கான்வே 37 ரன்னில் ஒஜாய் ஷீல்டு பந்து வீச்சில் ‘கேட்ச்’ ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 9 ரன்னில் வீழ்ந்தார்.
இதைத்தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா, டாம் லாதமுடன் இணைந்தார். வலுவான ஸ்கோரை நோக்கி பயணிக்க வைத்த இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்து அசத்தினர். தனது 14-வது சதத்தை அடித்த டாம் லாதம் 145 ரன்களிலும், 4-வது சதத்தை எட்டிய ரச்சின் ரவீந்திரா 176 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
3-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி 95 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 417 ரன்கள் எடுத்து 481 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. வில் யங் 21 ரன்னுடனும், மைக்கேல் பிரேஸ்வெல் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 109 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 466 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 531 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 531 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் சீரான விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜான் கம்பெல் 15 ரன்களிலும், டேகனரின் சந்தர்பால் 6 ரன்களிலும், அவர்களை தொடர்ந்து வந்த அலிக் அதானேஸ் 5 ரன்களிலும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
72 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணியை ஷாய் ஹோப் - ஜஸ்டின் கிரீவ்ஸ் ஜோடி சேர்ந்து காப்பாற்றினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் சதமடித்து அசத்தினார். மறுமுனையில் ஜஸ்டின் அரைசதம் கடந்தார்.
இதன் மூலம் 4-வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 74 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் அடித்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. ஹோப் 116 ரன்களுடனும், ஜஸ்டின் 55 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற இன்னும் 319 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் நியூசிலாந்து வெற்றி பெற 6 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய பரபரப்பான சூழலில் நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.