டி20 கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முன்னேற்றம்
மகளிர் டி20 பந்துவீச்சாளர்கள் வரிசையில் அன்னாபெல் சதர்லேண்ட் முதலிடத்தை பிடித்துள்ளார்.;
image courtesy:PTI
துபாய்,
பாகிஸ்தான் - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து மகளிர் டி20 கிரிக்கெட்டில் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
இதில் பேட்டிங் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீசின் ஹெய்லி மேத்யூஸ் 2-வது இடத்திலும், இந்தியாவின் மந்தனா 3-வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட அயர்லாந்து வீராங்கனை ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 8 இடங்கள் முன்னேறி 19-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையை பொறுத்தவரை அயர்லாந்து தொடரில் சொதப்பிய பாகிஸ்தான் வீராங்கனை சாடியா இக்பால் முதலிடத்தை இழந்துள்ளார். அதன் காரணமாக 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி சாடியா இக்பாலுடன் இணைந்து 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹெய்லி மேத்யூஸ் நம்பர்1 இடத்தில் தொடருகிறார். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக அயர்லாந்து வீராங்கனை ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 3 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் தீப்தி சர்மா 3-வது இடத்தில் தொடருகிறார்.