சாம்சன் ஏன் இந்திய அணியில் நிலையான இடத்தை பெற முடியவில்லை?- கவாஸ்கர்

சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடாத சஞ்சு சாம்சன் தவறான ஷாட்டை அடித்து தன்னுடைய விக்கெட்டை இழந்ததே ராஜஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

Update: 2024-05-25 10:51 GMT

மும்பை,

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 2-வது தகுதி சுற்று (குவாலிபயர் 2) போட்டியில் ராஜஸ்தானை 36 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் வீழ்த்தியது. சென்னையில் நேற்று நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஹெட்மயர், போவல் என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இந்த போட்டியில் பொறுப்புடன் விளையாட வேண்டிய கேப்டன் சாம்சன் 10 ரன்களில் (11) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இந்நிலையில் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடாத சஞ்சு சாம்சன் தவறான ஷாட்டை அடித்து தன்னுடைய விக்கெட்டை பரிசளித்தது ராஜஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

இப்படி அழுத்தமான சூழ்நிலையில் சொதப்புவதாலேயே இந்திய அணியிலும் அவர் இன்னும் பிரகாசிக்கவில்லை என்றும் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் 2024 டி20 உலகக்கோப்பையில் இதேபோல சொதப்பாமல் அவர் அசத்துவார் என்று நம்புவதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "உங்களுடைய அணி கோப்பையை வெல்லா விட்டால் இந்த வருடம் நீங்கள் 500 ரன்கள் அடித்து என்ன பயன்? ஒவ்வொரு முறையும் முக்கியமான நேரத்தில் அவர் தவறான ஷாட்டை அடித்து அவுட்டாகிறார். ஏன் சாம்சன் இதுவரை இந்தியாவுக்காக சரியான கெரியரை கொண்டிருக்கவில்லை? ஏனெனில் அவருடைய தவறான ஷாட் செலக்சன் அவரை கீழே தள்ளுகிறது. ஒருவேளை ஷாட் செலக்சன் நன்றாக இருந்திருந்தால் அவருடைய இந்திய கேரியர் நீண்டதாக இருந்திருக்கும். இந்த சூழ்நிலையில் டி20 உலகக்கோப்பையிலாவது அவர் தன்னுடைய வாய்ப்பை 2 கைகளால் இறுக்கமாக பிடித்து அணியில் தனது இடத்தை உறுதியாக்குவார் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்