சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்... சங்ககாராவின் சாதனையை முறியடித்த கோலி
301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.;
காந்தி நகர்,
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 26 ரன்களில் அவுட் ஆன நிலையில் விராட் கோலி களமிறங்கி விளையாடி வருகிறார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த 2வது வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். அதன்படி, சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ரன்களை எடுத்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அதேவேளை, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககாரா 28 ஆயிரத்து 16 ரன்கள் எடுத்து 2வது இடத்தில் இருந்தார். ஆனால், சங்ககாராவின் சாதனையை கோலி இன்று முறியடித்துள்ளார். கோலி இன்றைய ஆட்டத்தில் 42 ரன்கள் எடுத்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரத்து 17 ரன்களை எடுத்தார். இதன் மூலம் சங்ககாராவின் சாதனையை முறியடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த கோலி பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளார். 34 ஆயிரத்து 357 ரன்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தற்போதைய நிலவரப்படி இந்தியா 25.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 58 ரன்னிலும், கில் 56 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.