அதனால்தான் இந்திய பேட்டிங் ஆர்டரில் அடிக்கடி மாற்றங்கள் - திலக் வர்மா
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.;
image courtesy:PTI
மும்பை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதனையடுத்து இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
கடந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 213 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை விரட்டிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ரன்னில் அடங்கி தோல்வியை சந்தித்தது. திலக் வர்மா (62 ரன்) தவிர பேட்டிங்கில் யாரும் சோபிக்கவில்லை. பந்து வீச்சும் மெச்சும்படியாக அமையவில்லை.
கடந்த சில காலங்களாக இந்திய டி20 அணியின் பேட்டிங் வரிசையில் தொடக்க ஆட்டக்காரர்களை தவிர வேறு யாரும் நிலையான இடத்தில் களமிறக்கப்படவில்லை. அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனை பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருவதற்கான காரணம் குறித்து திலக் வர்மா சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு:- “அணியின் நிர்வாகம் எங்களுக்கு வழங்கும் இடத்தினை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எங்களது இலக்காக இருந்து வருகிறது. இந்திய வீரர்களில் தொடக்க வீரர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களுமே எந்த இடத்திலும் விளையாடும் அளவிற்கு தயாராக உள்ளோம். நான் 3-வது இடத்திலிருந்து 6-வது இடம் வரை எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு விளையாட தயாராக இருக்கிறேன்.
என்னை போன்றே அணியில் இருக்கும் மற்ற இந்திய வீரர்களும் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தங்களை தகவமைத்து கொள்ள தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் அடிக்கடி பேட்டிங் ஆர்டரில் இந்த மாற்றங்கள் இருந்து வருகின்றன” என்று கூறினார்.