3-வது டி20: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த உத்தப்பா.. யாருக்கெல்லாம் இடம்..?
இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.;
image courtesy:BCCI
தர்மசாலா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதனையடுத்து இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
கடந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றியால் கிடைத்த நம்பிக்கையுடன் தென் ஆப்பிரிக்க அணி உற்சாகத்துடன் களம் காணும். அதேநேரத்தில் முந்தைய தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணி வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் ஒரே மாற்றமாக கடந்த போட்டியில் விளையாடிய விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்துள்ளார்.
உத்தப்பா தேர்வு செய்த பிளேயிங் லெவன் பின்வருமாறு: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்.