ஐ.பி.எல். 2026: பந்துவீச தயார் - கேமரூன் கிரீன் அறிவிப்பு

எதிர்வரும் ஐ.பி.எல். மினி ஏலத்தில் கேமரூன் கிரீன் அதிக தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.;

Update:2025-12-14 14:37 IST

image courtesy:PTI

சிட்னி,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பி.சி.சி.ஐ. இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. அதன்படி 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

இதில் ரூ.15 கோடிக்கு மேல் ஏலம் போவார் என கணிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனின் தொடக்க விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர் ஏலப்பட்டியலில் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் இடம்பெறாமல் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இடம்பெற்றிருந்தார். இதன் காரணமாக அவர் ஐ.பி.எல். தொடரில் பந்து வீச மாட்டார் என யூகங்கள் கிளம்பின. இதனிடையே காயத்திலிருந்த மீண்ட அவர் சமீப காலமாக பந்துவீசாமல் இருந்து வந்தார். இதனால் அவர் ஐ.பி.எல். தொடரிலும் பந்துவீச மாட்டார் என கூறப்பட்டது.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் பந்துவீச தான் தயார் என்று கேமரூன் கிரீன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அவர், “எனது மேலாளர் இதைக் கேட்க விரும்புவாரா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது அவரது தரப்பில் ஏற்பட்ட ஒரு குழப்பம். அவர் தவறுதலாக பேட்ஸ்மேன் பட்டியலில் என்னை சேர்த்து விட்டார். நான் ஐ.பி.எல். தொடரில் பந்துவீச தயார்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்