நாங்கள் ஒரு போதும் அப்படி நினைக்கவில்லை - தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்திய மண்ணில் 25 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வென்றது.;
கவுகாத்தி,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 489 ரன்களும், இந்தியா 201 ரன்களும் எடுத்தன.
பின்னர் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுக்கு 260 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு 549 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 63.5 ஓவர்களில் 140 ரன்னுக்கு சுருண்டது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
ஏற்கனவே முதலாவது டெஸ்டில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்த தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய மண்ணில் 8-வது முறையாக டெஸ்ட் தொடரில் கால்பதித்த தென்ஆப்பிரிக்கா 2-வது முறையாக தொடரை வசப்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று இருந்தது. இப்போது 25 ஆண்டுகள் கழித்து கோப்பையை தட்டி தூக்கியிருக்கிறது.
இந்நிலையில் 25 ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா அளித்த பேட்டியில், “நாங்கள் இங்கு வரும்போது தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றுவோம் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. இந்தியாவில் சாதிப்பது எவ்வளவு கடினம் என்பதை அறிவோம். ஆனால் எங்களது வீரர்கள் மற்றொரு நம்ப முடியாத ஒரு சாதனையை படைத்துள்ளனர். சில மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கியுள்ளோம்.
எங்களிடம் தொடர்ந்து 150 ரன்கள் அடித்து பெரிய ஸ்கோர் செய்யும் வீரர்கள் இல்லை, ஆனால் 60 மற்றும் 70 ரன்கள் எடுக்கும் 4-5 வீரர்கள் உள்ளார்கள். ஒரு அணியாக, நாங்கள் நல்ல இடத்தில் இருக்கிறோம். நாங்கள் செயல்படும் விதம் எங்கள் நம்பிக்கையை இன்னும் வளர்க்கும் என்று நினைக்கிறேன்.” என கூறினார்.