தேசிய சப்-ஜூனியர் ஆக்கி: சாம்பியன் பட்டம் வென்ற பஞ்சாப்
நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பஞ்சாப்- ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் 15-வது தேசிய சப்-ஜூனியர் ஆக்கி (17 வயதுக்கு உட்பட்டோர்) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பஞ்சாப்- ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஜார்கண்டை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பஞ்சாப் அணியில் அக்ஷித் சலாரியா (29-வது நிமிடம்), வரிந்தர் சிங் (30-வது நிமிடம்), மன்தீப் சிங்கும் (45-வது, 53-வது நிமிடம்), ஜார்கண்ட் அணியில் ஆஷிஷ் தானி புத்ரி (21-வது நிமிடம்), அனிஷ் டுங்டுங் (24-வது நிமிடம்), சுகு குரியாவும் (42-வது நிமிடம்) கோலடித்தனர்.
முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் உத்தரபிரதேச அணி 5-3 என்ற கோல் கணக்கில் மத்தியபிரதேசத்தை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை பெற்றது.
பரிசளிப்பு விழாவுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்திரனாக வருகை தந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பையை வழங்கினார். சாய்ராம் கல்வி நிறுவன சேர்மன் சாய் பிரகாஷ் லியோ முத்து, ஆக்கி இந்தியா பொருளாளர் சேகர் மனோகரன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.