திருவள்ளூர் பிரிமீயர் லீக் ஆக்கி போட்டி நாளை தொடக்கம்
10 அணிகள் பங்கேற்கும் திருவள்ளூர் பிரிமீயர் லீக் ஆக்கி போட்டி நாளை தொடங்குகிறது.;
கோப்புப்படம்
சென்னை,
3-வது திருவள்ளூர் பிரிமீயர் லீக் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நாளை (11-ந் தேதி) முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ‘ஏ’ பிரிவில் வருமான வரி, மாஸ்கோ மேஜிக், தயாந்த் வீரன்ஸ், ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், ‘பி’ பிரிவில் இந்தியன் வங்கி, ஏ.ஜி.அலுவலகம், எஸ்.எம். நகர், பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ், தெற்கு ரெயில்வேயும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். தினசரி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி இரண்டு ஆட்டம் நடைபெறும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் சிக்ஸ் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும். 2-வது, 3-வது இடம் பெறும் அணிகள் பிளே-ஆப் போட்டியில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியை அடையும். இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படும்.
இந்த தகவலை திருவள்ளூர் பிரிமீயர் லீக் தலைவர் பிரகாஷ் அய்யாதுரை சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் வி.பாஸ்கரன், முகமது ரியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.