நார்வே செஸ் போட்டி: அமெரிக்க வீரரிடம் குகேஷ் தோல்வி
ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.;
ஸ்டாவஞ்சர்,
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
இதன் 7-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் குகேஷ், சக நாட்டவரான அர்ஜுன் எரிகைசியை சந்தித்தார். 3½ மணி நேரம் நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய குகேஷ் 92-வது நகர்த்தலில் அர்ஜுன் எரிகைசியை தோற்கடித்தார். கிளாசிக்கல் செஸ் போட்டியில் அர்ஜுன் எரிகைசிக்கு எதிராக குகேஷ் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அத்துடன் 2-வது சுற்றில் எரிகைசியிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில், இந்த போட்டியின் 8-வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் நகமுராவுடன் மோதினார். இந்த போட்டியில் ஹிகாரு நகமுரா வெள்ளைநிற காய்களுடனும், குகேஷ் கருப்பு நிற காய்களுடனும் ஆடினர். நகமுரா தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். 4 மணி நேரம் நீடித்த போட்டியின் இறுதியில் குகேஷை வீழ்த்தி நகமுரா வெற்றி பெற்றார். இதன் மூலம் 3-வது சுற்றில் குகேஷுடன் அடைந்த தோல்விக்கு நகமுரா பதிலடி கொடுத்துள்ளார்.
இன்னும் இரண்டு சுற்றுகள் மீதமுள்ள நிலையில், குகேஷ், நகமுரா தலா 11.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். அதே நேரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜி.எம். கருவானா 12.5 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், கார்ல்சன் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் எரிகைசி 10.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் இடத்திலும் உள்ளனர்.