டென்னிஸ் தரவரிசை: ஸ்வியாடெக்கை பின்னுக்கு தள்ளி சபலென்கா மீண்டும் முதலிடம்
டென்னிஸ் தரவரிசையில் இகா ஸ்வியாடெக்கை 2-வது இடத்துக்கு தள்ளி அரினா சபலென்கா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.;
image courtesy: wta twitter
நியூயார்க்,
டென்னிஸ் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன் ஒற்றையர் தரவரிசையில் கடந்த ஓராண்டாக முதலிடத்தில் இருந்த போலந்தின் இகா ஸ்வியாடெக்கை (9,665 புள்ளி) 2-வது இடத்துக்கு தள்ளி பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா (9,706 புள்ளி) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
கடந்த 2 மாதங்களாக சபலென்கா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அமெரிக்க ஓபன், வுஹான் ஓபன் ஆகிய போட்டிகளில் மகுடம் சூடிய அவர் சீன ஓபனில் அரையிறுதிவரை முன்னேறி இருந்தார். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவருக்கு 'நம்பர் ஒன்' இடம் கிடைத்துள்ளது. அவர் முதலிடத்தில் இருப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பரில் 8 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சபலென்கா, 'நம்பர் ஒன் இடம் இந்த முறை எவ்வளவு நாள் என்னிடம் இருக்கிறது என்பதை பார்க்கலாம்' என்று பதிவிட்டுள்ளார்.