ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; அரையிறுதிக்கு முன்னேறினார் அரினா சபலென்கா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.;
Image Courtesy: AFP / Aryna Sabalenka
மெல்போர்ன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) - ரஷியாவின் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் சபலென்காவும், 2வது செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இறுதியில் இந்த செட்டில் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவை வீழ்த்தி சபலென்கா வெற்றி பெற்றார். இறுதியில் 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவை வீழ்த்திய சபலென்கா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா, ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோத உள்ளார்.