சீன ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் கோகோ காப்-அனிசிமோவா
போராடி வெற்றியை வசப்படுத்திய அனிசிமோவா அரைஇறுதியில் கோகோ காப்புடன் மோத உள்ளார்.;
பீஜிங்,
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் 3-ம் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான கோகோ காப் (அமெரிக்கா) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் இவா லைஸ்சை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். அத்துடன் அடுத்த மாதம் நடக்கும் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனை அமன்டா அனிசிமோவா (அமெரிக்கா) 6-7 (4-7), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) வெளியேற்றினார். 2 மணி 47 நிமிடங்கள் போராடி வெற்றியை வசப்படுத்திய அனிசிமோவா அரைஇறுதியில் கோகோ காப்புடன் மல்லுக்கட்டுகிறார். முன்னதாக 4-வது சுற்றில் அமெரிக்காவின் எம்மா நவரோ 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் இகா ஸ்வியாடெக்குக்கு (போலந்து) அதிர்ச்சி அளித்தார்.
இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ஜானிக் சினெர் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் லியானெர் டியானை வீழ்த்தி மகுடம் சூடினார். சினெருக்கு இது 21-வது சர்வதேச பட்டமாகும். அவருக்கு ரூ.6½ கோடியும், டியானுக்கு ரூ.3½ கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.
சினெர் அடுத்ததாக சீனாவில் தொடங்கியுள்ள ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிசில் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகிறார்.