அமெரிக்க ஓபன் டென்னிஸ்; வீனஸ் வில்லியம்சிற்கு சிறப்பு அனுமதி
அமெரிக்க ஓபன் டென்னிசில் பங்கேற்க அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சிற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
நியூயார்க்,
நியூயார்க்கில், வரும் 24ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை யு.எஸ். ஓபன் (அமெரிக்க ஓபன்) கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கவுள்ளது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்சிற்கு 'வைல்டு கார்டு' முறையில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவருக்கு, கலப்பு இரட்டையரில் விளையாட 'வைல்டு கார்டு' அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் களமிறங்க உள்ளார் வீனஸ். இத்தொடரின் ஒற்றையர், இரட்டையரில் தலா 2 முறை கோப்பை வென்ற வீனஸ், கடைசியாக 2023ல் முதல் சுற்றோடு வெளியேறினார்.
கடந்த 1981க்கு பின், யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் பங்கேற்கும் மூத்த வீராங்கனை (45 வயது) என்ற பெருமை பெற உள்ளார் வீனஸ். இதற்கு முன், 1981ல் அமெரிக்க வீராங்கனை ரெனீ ரிச்சர்ட்ஸ், தனது 47வது வயதில் விளையாடி இருந்தார்.