10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க. ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை - ராகுல் காந்தி தாக்கு
அதானி குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதும், சில வாரங்களில் எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது என்று ராகுல் காந்தி கூறினார்.
கோவை,
கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இருவரும் பரப்புரை ஆற்றுகின்றனர். இந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து ராகுல் காந்தி தற்போது பேசி வருகிறார். அவர் கூறியதாவது:-
மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு. அதானிக்காகவே, மோடி எல்லாம் செய்கிறார். சாலை, உள்கட்டமைப்பு, விமான நிலையம் என எதை அவர் விரும்புகிறாரோ, அதை மோடி கொடுத்துவிடுவார். அதானி எப்படியெல்லாம் இந்த அரசில் சலுகைகளை பெறுகிறார் என நாடாளுமன்றத்தில் பேசியதும், சில வாரங்களில் எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
எனது அரசு இல்லமும் பறிக்கப்பட்டது. உண்மையிலேயே எனக்கு அந்த வீடு தேவையில்லை. இந்திய மக்களின் இதயத்தில் பல லட்சம் வீடுகள் உள்ளன. என் வீடு பறிக்கப்பட்டாலும் தமிழர்கள் எனக்காக தங்களது வீடுகளை திறந்து வைத்திருப்பார்கள். பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வெறும் அரசியல் தலைவர்கள் அல்ல. மக்களின் குரலாக இருந்ததால், அவர்கள் பேசியதை உலகமே கேட்டது.
ஏன் தமிழ் மொழி மீது, தமிழ் வரலாற்றின் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? என மக்கள் மோடியை நோக்கி கேட்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வந்து தோசை பிடிக்கும் என கூறிவிட்டு, டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவர் என பேசுகிறீர்கள். மோடிக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னை இல்லை. தமிழ் மொழி, கலாசாரத்தை பிடிக்குமா என்று கேட்கிறார்கள். ஏன் 'ஒரே நாடு ஒரே மொழி' என ஒரு மொழிக்காக எப்போதும் பேசுகிறீர்கள். தமிழ், பெங்காலி, கன்னடா, மணிப்பூரி ஆகிய மொழிகளுக்கெல்லாம் ஏன் நீங்கள் பேசக் கூடாது?
தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற பல நிறுவனங்கள் மிரட்டப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதாலேயே அது குறித்த விபரங்கள் வெளியாகின. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க. ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.