30 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் - ராகுல்காந்தி உறுதி


30 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் - ராகுல்காந்தி உறுதி
x
தினத்தந்தி 12 April 2024 5:09 PM IST (Updated: 12 April 2024 6:31 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி ஆட்சியில் இரண்டு, மூன்று தொழிலதிபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று ராகுல் காந்தி கூறினார்.

நெல்லை,

நெல்லையில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல்காந்தி, இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ராபர்ட் புரூஸ் (நெல்லை), கனிமொழி (தூத்துக்குடி), ராணிஸ்ரீகுமார் (தென்காசி), சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), நவாஸ்கனி (ராமநாதபுரம்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஜய் வசந்த் (கன்னியாகுமரி) ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது. ஒரு பக்கம் பெரியார் போதித்த சமூகநீதி, சமத்துவம், விடுதலை இருக்கிறது. மற்றொரு பக்கம் மோடியை போன்றவர்கள் கொண்டாடும் வெறுப்பும், துவேசமும் இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள் உள்ளன. ஒன்றை விட மற்றொன்று எந்த விதத்திலும் தாழ்ந்தது அல்ல. தமிழ் வெறும் மொழி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது. தமிழ் மீது தொடுக்கப்படும் தாக்குதலை, தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே பார்க்கிறேன். தமிழ், வங்காளம் போன்ற நாட்டில் பேசப்படும் மொழிகள் இல்லாமல் இந்தியா இருக்க முடியாது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தர மறுத்துவிட்டது. தமிழக விவசாயிகள் டெல்லி சென்று போராடிய போது அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. மத்திய அரசு, தமிழகத்திற்கு எதையும் செய்யவில்லை. நாட்டின் 25 பெரும் பணக்காரர்கள் 70 சதவீத மக்களின் பணத்தை வைத்துள்ளனர். கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். நாட்டில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை; பணக்காரர்களின் கடனே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் இரண்டு, மூன்று தொழிலதிபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சிறு, குறு தொழில் அனைத்தும் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பால் சீரழிந்துள்ளது

அனைத்து துறைமுகங்கள், மின்சார தயாரிப்பு நிறுவனங்களை அதானி வசம் ஒப்படைக்கிறார். நாட்டின் அனைத்து அமைப்புகள், முகமைகள் ஆர்.எஸ்.எஸ் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. 30 லட்சம் அரசு பணிகள் காலியாக உள்ள நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதை நிரப்புவோம். வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் மூலம் தகுதி உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு லட்சம் நிதி உதவியுடன் பயிற்சி தர திட்டமிட்டுள்ளோம்.

மாநில அரசுகள் விரும்பினால் நீட் தேர்வு தொடரும். இதில் மாநில அரசே முடிவு செய்யும். தமிழ்நாட்டு மக்களே தங்களுடைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும், தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.

தமிழ்நாட்டு பெண்களும் சரி, இந்தியாவின் பெண்களும் சரி, தேசத்தின் எதிர்காலத்தை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். இந்தியாவில் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பான திட்டத்தை இந்தியா கூட்டணி வைத்துள்ளது. வறுமையின் பிடியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீனவர்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் தொழிலை முன்னேற்ற தனி தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளோம். விவசாயிகள் எவ்வளவு முக்கியமோ மீனவர்களும் நாட்டுக்கு மிகவும் முக்கியம். மீனவர்களின் படகுகளுக்கு டீசல், காப்பீடு, கடன் அட்டை உள்ளிட்டவை வழங்கப்படும். இந்திய மீனவர்களின் நலனை பிரதமர் மோடி முற்றிலும் மறந்து விட்டார்.

ஏற்கனவே சொன்னது போல, இது ஒரு தத்துவப் போர். நாட்டின் அரசியல் சாசனத்தை காக்கும் இந்தப் போரில் நாம் வெல்வோம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். நானும், காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டோடு எப்போதும் இருப்போம். மோடி மட்டுமல்ல உலகில் எவராலும் தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story