கடலூரில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்


கடலூரில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்
x
தினத்தந்தி 6 April 2024 7:40 AM IST (Updated: 6 April 2024 8:06 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

கடலூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

அதன்படி நேற்று கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வி.சி.க. வேட்பாளர் துரை.ரவிக்குமார் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் அருகே வி.சாலையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து பிரசார பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு, அங்கிருந்து கார் மூலம் கடலூர் வந்தடைந்தார். இன்று (சனிக்கிழமை) காலை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் நடந்து சென்று பொதுமக்கள், வியாபாரிகளிடம் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்துக்கு ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து மதியம் முக்கிய நிர்வாகிகள், வர்த்தக சங்க பிரமுகர்களை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.

அதன்பிறகு மாலை 6 மணிக்கு மேல் சிதம்பரம் அருகே லால்புரத்தில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வி.சி.க. வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கடலூர், சிதம்பரத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.


Next Story