கோடீஸ்வர எம்.பி.க்களில் டாப்.. கமல்நாத் மகனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


கோடீஸ்வர எம்.பி.க்களில் டாப்.. கமல்நாத் மகனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
x

கடந்த ஐந்து ஆண்டுகளில் நகுல் நாத்தின் சொத்து மதிப்பு ரூ.40 கோடி உயர்ந்துள்ளதாக பிரமாண பத்திரம் மூலம் தெரியவந்துள்ளது.

போபால்:

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரம் மூலம், அவர்களின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத்தின் மகனும், மத்திய பிரதேசத்தின் ஒரே ஒரு காங்கிரஸ் எம்.பி.யுமான நகுல் நாத், தனக்கு ரூ.700 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

சிந்த்வாரா தொகுதியின் எம்.பி.யான நகுல் நாத், மீண்டும் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். ரொக்கப் பணம், பங்குகள்-பத்திரங்கள் என ரூ.649.51 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.48.07 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக நகுல் நாத் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் நகுல் நாத்தின் சொத்து மதிப்பு ரூ.40 கோடி உயர்ந்துள்ளதாக பிரமாண பத்திரம் மூலம் தெரியவந்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) தகவலின்படி, 2019-ம் ஆண்டில் 475 நாடாளுமன்ற கோடீஸ்வர உறுப்பினர்களின் (மக்களவை உறுப்பினர்கள்) பட்டியலில் நகுல் நாத் முதலிடத்தில் இருக்கிறார்.

பெரும் தொழிலதிபரான நகுல் நாத், 2019ல் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிட்டபோது சொத்து மதிப்பு ரூ.660 கோடி இருந்ததாக கூறியிருந்தார். அந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களில் இவர் மட்டுமே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story