மக்களவை தேர்தல்: பஞ்சாப்பில் தனித்துப் போட்டி - பா.ஜ.க. அறிவிப்பு


மக்களவை தேர்தல்: பஞ்சாப்பில் தனித்துப் போட்டி - பா.ஜ.க. அறிவிப்பு
x

பஞ்சாப் மாநிலத்தில் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

சண்டிகர்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன. இதில் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 மக்களவை தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பஞ்சாப்பில் சிரோமணி அகாலி தளம் கட்சி மற்றும் பா.ஜ.க. இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் சுனில் ஜக்கார் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பஞ்சாப்பில் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடப் போகிறது. பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு பா.ஜ.க. இந்த முடிவை எடுத்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் பா.ஜ.க. செய்த பணிகள் குறித்து அனைவருக்கும் தெரியும். கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் விளைபொருட்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டன" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story