நாடாளுமன்ற தேர்தல்: இன்று கர்நாடகா செல்கிறார் ராகுல் காந்தி


நாடாளுமன்ற தேர்தல்: இன்று கர்நாடகா செல்கிறார் ராகுல் காந்தி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 16 April 2024 10:23 PM GMT (Updated: 17 April 2024 11:31 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக வருகிற 26, மே 7-ந் தேதி நடைபெற உள்ளது. முதல்கட்டமாக பெங்களூரு உள்பட தென் கர்நாடகத்தில் தோ்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் தலைவா்களின் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி கடந்த 14-ந் தேதி மைசூரு, மங்களூருவில் பிரசாரம் மேற்கொண்டார். ராகுல் காந்தி இதுவரை கர்நாடகம் வந்து பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று (புதன்கிழமை) கர்நாடகம் வந்து பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி முதல் முறையாக கர்நாடகத்தில் பிரசாரம் செய்கிறார். முதலில் அவர் மண்டியாவுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் காங்கிரசின் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அந்த பிரசார கூட்டத்தை முடித்துக்கொண்டு அவர் கோலாருக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் காங்கிரசின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். ராகுல்காந்தியுடன் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். ராகுல் காந்தி வருகையையொட்டி மண்டியா, கோலாரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு பிறகு பிரியங்கா காந்தி கர்நாடகத்திற்கு வருகை தர உள்ளார். அவர் பிரசாரம் மேற்கொள்ளும் தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்த வாரத்தின் இறுதியில் அவர் கர்நாடகா செல்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.


Next Story