'10 ஆண்டுகளாக எட்டிப்பார்க்காத பிரதமர் தேர்தலுக்காக அடிக்கடி வருகிறார்' - உதயநிதி ஸ்டாலின்
பிரதமர் மோடி தேர்தலுக்காக அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தேனி,
தேனி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது;-
"பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆனால் தற்போது தேர்தலுக்காக அடிக்கடி இங்கு வருகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார். ஆனால் தற்போது வரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரே ஒரு செங்கல்லையும் நான் தூக்கிக் கொண்டு வந்துவிட்டேன். அந்த செங்கல் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்கும் வரை அந்த செங்கல்லை திருப்பி தரமாட்டேன்."
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.