பிரதமர் மோடி தனது பணக்கார நண்பர்களுக்கு ரூ. 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார் - ராகுல்காந்தி தாக்கு
பிரதமர் மோடி தனது பணக்கார நண்பர்களுக்கு ரூ. 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜுன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
2ம் கட்ட தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பிரதமர் மோடி தனது பணக்கார நண்பர்களுக்கு வழங்கிய 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளார். இவ்வளவு பணத்தில் 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டிற்கு 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கலாம்.
1 லட்சம் சம்பளத்தில் 16 கோடி பெண்களுக்கு வேலை கிடைத்திருக்கலாம். அவ்வாறு நடைபெற்றால் அவர்களின் வாழ்க்கை மாறி இருக்கலாம். 10 கோடி விவசாய குடும்பங்களில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு எண்ணற்ற தற்கொலைகளை தடுத்திருக்கலாம்.
நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன் நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அதை யாராலும் தடுக்க முடியாது
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.