'ரேபரேலியில் தோற்ற பிறகு ராகுல் காந்தி இத்தாலியில் குடியேற வேண்டும்' - அமித்ஷா


ரேபரேலியில் தோற்ற பிறகு ராகுல் காந்தி இத்தாலியில் குடியேற வேண்டும் - அமித்ஷா
x

ரேபரேலியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு ராகுல் காந்தி இத்தாலியில்தான் குடியேற வேண்டும் என அமித்ஷா விமர்சித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி, ஹர்தோய், கன்னோஜ் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

"இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை. அவர்கள் தங்கள் வாக்கு வங்கியைக் கண்டு பயப்படலாம், பா.ஜ.க. அவ்வாறு இல்லை. ராமர் கோயிலைக் கட்டியது மட்டுமல்ல, அவுரங்கசீப்பால் அழிக்கப்பட்ட காசி விஸ்வநாத் வழித்தடத்தையும் மோடி கட்டினார்.

அவர்களின் வாக்கு வங்கி யார் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்கும்.

எதிர்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கன்னோஜ் தொகுதியிலும், அவரது மனைவி டிம்பிள் யாதவ் மெய்ன்புரி தொகுதியிலும், அக்ஷய் யாதவ் பிரோசாபாத்திலும், தர்மேந்திர யாதவ் அசம்கார் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அவர்களின் குழந்தைகள் வளர்ந்தவுடன், உத்தர பிரதேசத்தின் அனைத்து இடங்களிலும் அவர்களே போட்டியிடுவார்கள். அவர்கள் யாதவ் சமூகத்தின் நலன் விரும்பிகள் அல்ல.

நீங்கள் மோடியை இரண்டாவது முறையாக பிரதமராக்கியதும், ராம ஜென்மபூமி தொடர்பான சட்டப் பிரச்சனையில் வெற்றி பெற்றது மட்டுமின்றி, ராமர் கோவிலின் திறப்பு விழாவும் நடத்தப்பட்டு, அதன் கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் ஜைனர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ.) மோடி கொண்டு வந்தார். ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் சி.ஏ.ஏ.வை திரும்பப் பெறுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால், அதை யாராலும் செய்ய முடியாது.

இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் அதன் பிரதமர் யார்? அவர்களிடம் பிரதமர் வேட்பாளர் கூட இல்லை. அவர்களுக்கு ஒரு தலைவரும் இல்லை, கொள்கையும் இல்லை, உறுதியும் இல்லை.

வறுமையை ஒழிக்கப்போவதாக ராகுல் காந்தி பேசி வருகிறார். அவரது பாட்டி (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி) எமர்ஜென்சியை கொண்டு வந்தார். அவரது தந்தை (முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி) மீண்டும் முத்தலாக்கை அமல்படுத்தினார். அவரது கட்சி பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் இடஒதுக்கீட்டைப் பறித்தது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியும் அதன் சகாக்களான சமாஜ்வாதி கட்சியும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர்கள். இதை அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அமேதியில் இருந்து வயநாடு சென்ற ராகுல் காந்தி, தற்போது ரேபரேலியில் போட்டியிட்டு தோல்வியடையப் போகிறார். அதன் பிறகு அவர் இத்தாலியில்தான் குடியேற வேண்டும்."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.


Next Story