உச்சி வெயிலை விட உக்கிரமான மத்திய அரசை விரட்டியே ஆக வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்


உச்சி வெயிலை விட உக்கிரமான மத்திய அரசை விரட்டியே ஆக வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
x
தினத்தந்தி 29 March 2024 8:22 AM GMT (Updated: 29 March 2024 11:03 AM GMT)

பிங்க் பஸ்சை தாய்மார்கள் ஸ்டாலின் பஸ் என்றுதான் அழைக்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பொன்னேரி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த உச்சி வெயிலை விட உக்கிரமான மத்திய அரசை விரட்டியே ஆக வேண்டும் என்று இவ்வளவு எழுச்சியோடு கூடி இருக்கிறீர்களே...அதற்கு முதலில் நன்றி. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் நான் இதே இடத்தில் பிரசாரத்தை மேற்கொண்டேன். அப்போது இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 3 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தீர்கள். ஆனால் இந்த முறை 3 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் போதாது.கடந்த முறை நமது எதிரிகள் ஒன்றாக சேர்ந்து வந்தார்கள். இன்று எல்லோரும் பிரிந்து நிற்கிறார்கள். எனவே குறைந்தது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும். நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். குறைந்த பட்சம் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தால் மாதம் 2 நாள் நான் இங்கு வந்து திருவள்ளூர் தொகுதியில் தங்கி உங்களுடைய தொகுதியின் அனைத்து தேவைகளையும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றி தருவேன்.

நீங்கள் இதை செய்தால் எனது வாக்குறுதியை நான் காப்பாற்றுவேன். நீங்கள் எங்கள் வேட்பாளருக்கு போடும் வாக்கு, பிரதமர் மோடியின் தலையில் வைக்கும் வேட்டு. தலைவர் கலைஞர் ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சொல்வார். சொல்வதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்று செய்து காட்டினார். அவரது வழியில் வந்த முதல்-அமைச்சரும் சொல்வதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார். பொன்னேரி அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் முதல் தரமான மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும்.

அனைத்து குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி விரிவுபடுத்தப்படும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இந்த தொகுதியை சுற்றி உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்து தருவோம். மாதவரம் அல்லது விம்கோ நகரில் இருந்து மெட்ரோ ரெயில் சேவை மீஞ்சூர் வரை நீட்டிக்கப்படும். பாரம்பரிய மீனவ சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். மீனவர்கள் நலன் காக்க தேசிய மீனவர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மாயமாவதை தடுக்க தடையற்ற தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தி தரப்படும். இந்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் உங்களுக்கு கொடுத்து உள்ளார்.

மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி திட்டத்தை முதல்-அமைச்சர் கொடுத்தார். இங்கு வந்திருக்கும் மகளிரும் இதை பயன்படுத்துகிறீர்கள் தானே. இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் நிற பஸ்தான். இன்னும் சொல்லப்போனால் நாம், பெண்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் அதை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பெண்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இப்போது அவர்கள்தான் பஸ் உரிமையாளர்கள். எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம்.

இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி. இதுதான் திராவிட மாடல் அரசு. இப்போது பிங்க் பஸ்சை தாய்மார்கள் ஸ்டாலின் பஸ் என்றுதான் சொல்கிறார்கள்.எடப்பாடி பழனிசாமி யாரைப்பார்த்தாலும் முட்டி போட்டு விடுகிறார். பிரதமர் மோடியை பார்த்தால் படுத்து விடுகிறார். மனிதருக்கு முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கத்தான் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் முதுகெலும்பு இல்லாத ஒரே மனிதர் எடப்பாடி பழனிசாமிதான்.

மோடி பிரதமராக வரக்கூடாது என்று எங்களால் கூற முடியும். ஆனால் எடப்பாடி பழனிசாமி கூறுவாரா? ஐபிஎல் விளையாட்டும் அ.தி.மு.க.வும் ஒன்று. அ.தி.மு.க.விலும் அத்தனை அணிகள் உள்ளன.பிரதமர் மோடியின் பெயரை 29 காசு என்று மாற்றிவிட்டேன். ஏனென்றால், நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால் வெறும் 29 காசு தான் தருகிறார். இனி யாரும் பிரதமர் நரேந்திர மோடி என்று சொல்லாதீர்கள். இனி அவரது பெயர் 29 காசு. இன்னும் ஒரு மாதம் தான் அவர் பிரதமர். அதன் பிறகு அவர் பிரதமர் கிடையாது. பா.ஜ.க,வின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்தான் நம்முடைய வேட்பாளர் சசிகாந்த் செந்தில்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story