சிவமொக்காவில் ‘தளபதி 64’ படத்தின் படபிடிப்பு நடக்கிறது: நடிகர் விஜயை காண குவிந்த ரசிகர்கள் - பலத்த போலீஸ் பாதுகாப்பு


சிவமொக்காவில் ‘தளபதி 64’ படத்தின் படபிடிப்பு நடக்கிறது: நடிகர் விஜயை காண குவிந்த ரசிகர்கள் - பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 13 Dec 2019 3:45 AM IST (Updated: 13 Dec 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா பழைய சிறையில் ‘தளபதி 64’ படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் விஜயை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிவமொக்கா,

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து அவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘தளபதி 64’ என்ற பெயரில் படபிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படபிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்தது. தற்போது 2-வது கட்ட படபிடிப்பு கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடந்து வருகிறது.

சிவமொக்காவில் உள்ள பழைய சிறையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. நாளை (சனிக்கிழமை) வரை இந்த படபிடிப்பு நடக்கும் என தெரிகிறது.

‘தளபதி 64’ படத்தின் பட பிடிப்பு கடந்த 1-ந்தேதியில் இருந்து தொடங்கி நடந்து வந்தாலும், நடிகர் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் நேற்று முன்தினம் முதல் படமாக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் நடிகர் விஜய், படபிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இதனால் அவர், சிவமொக்கா பி.எச். சாலையில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் தங்கி உள்ளார். நடிகர் விஜய், படபிடிப்பில் கலந்துகொண்டது பற்றி அறிந்த அவருடைய ரசிகர்கள் பழைய சிறையில் குவிய தொடங்கி உள்ளனர்.

மேலும் அவர்கள் நடிகர் விஜய் தங்கி உள்ள ஓட்டல் முன்பும் குவிந்துள்ளனர். நடிகர் விஜயை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளதால், பாதுகாப்பு கருதி அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடும் குளிரிலும் இரவிலும் நடிகர் விஜயை காண ரசிகர்கள் ஓட்டல் முன்பு காத்து கிடக்கிறார்கள்.

Next Story