உபவாசம் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க முடியுமா?
உடல் எடையைக் குறைப்பதற்காக உபவாசம் முறையைப் பின்பற்றுவது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உணவு உண்ணாமல், தண்ணீர் பருகாமல் இருப்பது உடலில் நீர் வறட்சியை உண்டாக்கும்.
உடல் எடையைக் குறைக்க எண்ணுபவர்கள், பல்வேறு டயட் முறைகளைப் பின்பற்றுவார்கள். சில பெண்கள் எடையைக் குறைக்கவும், ஆன்மிக அடிப்படையிலும் உபவாசம் இருப்பார்கள்.
உடல் எடை குறைத்தல் என்பது ஒவ்வொருவரின் உடல் அமைப்பையும், செயல்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டது. உபவாசம் இருக்கும்போது செரிமான மண்டலம் ஓய்வு நிலையில் இருக்கும்.
இந்த நேரத்தில் உடலில் நடைபெறும் சிறுசிறு செயல்களையும் நம்மால் உணர முடியும். இது செல்களின் வளர்ச்சிக்கும், புத்துணர்ச்சிக்கும் உதவும்.
உண்ணும் உணவு செரிப்பதற்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆகும். பின்னர் இது ஆற்றலாக மாறும். இந்தக் கால இடைவெளிக்குக் குறைவாக, தொடர்ந்து சாப்பிடும்போது, உடலின் தேவைக்கும் அதிகமான ஆற்றல் கொழுப்பாக சேமிக்கப்படும். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சக்தியை உபவாச நேரத்தில் உடல் பயன்படுத்திக்கொள்ளும்.
ஒரு வேளை, இரண்டு வேளை உணவு சாப்பிடுதல், வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுதல், உப்பு சுவையைத் தவிர்த்து உணவு சாப்பிடுதல், அசைவ உணவைத் தவிர்த்து மற்ற உணவுகளைச் சாப்பிடுதல் என்று பல்வேறு விதங்களில் உபவாசம் மேற்கொள்ளப்படுகிறது.
உபவாசம் இருப்பதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புத்துணர்வு பெறும். உபவாசத்துக்குப் பின் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவைச் சாப்பிடுவது நல்லது. தவிர, நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ள உணவைச் சாப்பிடலாம். இது உடலின் இயக்கத்தை சீராக்கும்.
உடல் எடையைக் குறைப்பதற்காக உபவாசம் முறையைப் பின்பற்றுவது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உணவு உண்ணாமல், தண்ணீர் பருகாமல் இருப்பது உடலில் நீர் வறட்சியை உண்டாக்கும்.
மேலும், பலர் உபவாச முறையில் பெரும்பாலும் காலை உணவைத் தவிர்த்து, மதிய உணவை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். இது பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இதைத் தொடர்ந்து செய்யும்போது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகும்.
உபவாசம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், உடலின் உள் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும். அதேசமயம், உடல் எடையைக் குறைப்பதற்காக தீவிரமாகக் கடைப்பிடிப்பது தவறு. உடலின் முழு இயக்கத்துக்கு ஆரோக்கியமான மற்றும் சரிவிகித ஊட்டச்சத்து உணவு எப்போதும் அவசியம்.
Related Tags :
Next Story