ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பால் டெஸ்ட் கிரிக்கெட்; டிராவில் முடிந்தது !


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பால் டெஸ்ட் கிரிக்கெட்;  டிராவில் முடிந்தது !
x
தினத்தந்தி 3 Oct 2021 12:21 PM GMT (Updated: 3 Oct 2021 12:22 PM GMT)

பிங்க் பால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 272 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

குயின்ஸ்லாந்து,

ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒரே ஒரு பிங்க் பால் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. குயின்ஸ்லாந்தில் வைத்து நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில்  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி இந்திய அணி  முதல் இன்னிங்சில் 377 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 241 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 136 ரன்கள் முன்னிலையுடன் 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய பெண்கள் அணிக்கு, ஷபாலி வர்மா மற்றும்  ஸ்மிரிதி மந்தனா இணை சிறப்பான தொடக்கம் அமைத்தனர். இருவரும் சேர்ந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்தனர். ஸ்மிரிதி மந்தனா 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யஷ்டிகா பாட்டியா 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய ஷபாலி வர்மா அரைசதம் அடித்தார்.

இதனால் 4ம் நாள் தேநீர் இடைவெளி வரை இந்திய அணி,  106 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வந்தது.
ஷபாலி 51 ரன்களுடனும் பூனம் ரவுத் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தேநீர் இடைவெளிக்கு பின், ஷபாலி வர்மா 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். எனினும், தொடர்ந்து சிறப்பாக ஆடிய பூனம் ரவுத் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.

32 ஓவர்களில் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய மகளிர் அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது.

15 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரு அணி கேப்டன்களும் ஆட்டத்தை முடித்துக் கொள்ள முடிவெடுத்தனர். இந்திய மகளிர் அணி வெற்றி பெற இன்னும் 8 விக்கெட்டுகள் தேவையிருந்த நிலையில், ஆட்டம் டிரா ஆனது.

இப்போட்டியின்   சிறந்த வீராங்கனைக்கான   விருதை ஸ்மிரிதி மந்தனா வென்றார்.
அடுத்து இன்னும் 3 நாட்களில் இவ்விரு அணிகளுக்கான டி-20 போட்டிகள் தொடங்க உள்ளன.ஆஸ்திரேலிய மகளிர் அணி 6-4 என்கிற கணக்கில் இந்த பல வகை கிரிக்கெட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

Next Story