ஐ.பி.எல். கிரிக்கெட்: 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றி!


ஐ.பி.எல். கிரிக்கெட்: 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றி!
x
தினத்தந்தி 3 Oct 2021 2:27 PM GMT (Updated: 3 Oct 2021 2:27 PM GMT)

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சார்ஜா,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.  இன்றைய 48-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற  விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதனையடுத்து,  பெங்களூரு  அணி முதலில் பேட்டிங் செய்தது.பெங்களூரு  அணியின் தொடக்க வீரர்களாக கோலி மற்றும் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர். இறுதியில் பெங்களூரு அணி  20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக படிக்கல் 40 ரன்கள் மற்றும் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 57 ரன்கள் எடுத்தனர்.

பின்னர், 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்தனர். இதனால் பவர்-பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சேர்ந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் உருவாக்கினர். ராகுல் 35 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சிறப்பாக ஆடிய அகர்வால் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர்  42 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஆட்டம் பரபரப்பாக சென்றது.கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷாருக் கான் கடைசி ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆக ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இறுதியில் 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. சிறப்பான தொடக்கம் கிடைத்தும் பஞ்சப் அணியால் வெற்றி பெற முடியவில்லை. இதன்மூலம் அந்த அணியின் பிளே-ஆப் வாய்ப்பு சிக்கலாகி உள்ளது.

பெங்களூரு அணி தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.இதன் மூலம் 16 புள்ளிகள் பெற்று பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


Next Story